`போன செமஸ்டர் தேர்வுத்தாளா இது?’

இன்ஜினீயரிங் படிக்காத அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பதவியிலிருக்கும் வெங்கடேசன், இன்ஜினீயரிங் படித்தவர் அல்ல. கணிதம் படித்த இவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியமர்த்தும் பிரிவின் இயக்குநராகவும் இருந்துவருகிறார். இவ்வாறு வெங்கடேசனுக்கு எதிராகச் சிலர் போர்க்கொடி தூக்கினாலும் அவர், சிறப்பாகப் பணியாற்றுவதால் அவருக்கு உயர் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும், வினாத்தாளைத் தயாரித்த பேராசிரியர் மதுரையில் உள்ள தன்னாட்சி கல்லூரியில் பணியாற்றுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. மறுமதிப்பீடு விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சிக்கியது. அதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டில் சிக்கிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா மற்றும் பதிவாளராக இருந்த கணேசன் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. தற்போது தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்பில் வெங்கடேசன் என்பவர் உள்ளார். பதிவாளர் பொறுப்பில் குமார் இருக்கிறார்.

13-வது கொஸ்டின் இல்ல சார்’ தேர்வறையில் அண்ணா பல்கலை மாணவர்கள் அதிர்ச்சி

இந்தச் சூழ்நிலையில் அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரிகளில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களுக்கான 6 வது, 7 வது செமஸ்டர் தேர்வு கடந்த 2-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு அறையில் வினாத்தாளைப் பெற்ற மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, கடந்த ஆண்டு நடத்தப்பட்ட செமஸ்டர் தேர்வின் ஆப்டோ எலக்ட்ரானிக் டிவைசைஸ் என்ற பாடத்தின் (EC6016) வினாத்தாளிலிருந்து 80 சதவிகித கேள்விகள் திரும்பவும் இந்தத் தேர்வின் வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்தன.




இந்தத் தகவல் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்குத் தெரியவந்தது. உடனே, வினாத்தாளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, பார்ட் ஏ, பி ஆகியவற்றில் கேட்கப்பட்ட வினாக்களில் பெரும்பாலானவை கடந்த ஆண்டு செமஸ்டர் தேர்வின் வினாக்கள் என்பது தெரியவந்தது. இதற்கு இந்த ஆண்டுக்கான தேர்வின் வினாத்தாளைத் தயாரித்த பேராசிரியரே காரணம் என்று சொல்லப்படுகிறது. வழக்கமாக வினாத்தாள்கள் தயாரிக்கும்போது. பழைய வினாத்தாளிலிருந்து ஒருசில கேள்விகள் கேட்படுவதுண்டு. ஆனால், இந்தத் தேர்வில் பழைய வினாத்தாளில் இடம்பிடித்துள்ள கேள்விகளை அப்படியே திரும்பவும் கேட்கப்பட்டுள்ளதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மறுதேர்வை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் கூறுகையில்,“வினாத்தாளின் `பார்ட் – ஏ’-வில் 10 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு தலா 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்போது நடந்த தேர்வில் 10 கேள்விகளில் 4 கேள்விகள் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வினாத்தாளிலிருந்து கேட்கப்பட்டுள்ளன. ‘பார்ட்- பி’-வில் 5 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு தலா 13 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில் கடந்த செமஸ்டரின் (2017) தேர்வின் வினாத்தாளில் உள்ள கேள்விகள் அப்படியே கேட்கப்பட்டுள்ளன. இந்த முறை பார்ட்- சி என்று புதியதாகக் கேள்வித்தாளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றனர்.

இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசனிடம் பேசினோம். “கடந்த ஆண்டு செமஸ்டர் தேர்வின் வினாத்தாளில் இடம்பிடித்த கேள்விகள் இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது. இதனால் வினாத்தாளைத் தயாரித்த பேராசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடந்த 2-ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு வரும் 28-ம் தேதி மறுதேர்வை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடத்த சுற்றறிக்கை அனுப்பியுள்ளேன்” என்றார்.

வினாத்தாளைத் தயாரிக்கும் பேராசிரியர் டீமில் உள்ளவர்களின் கவனக்குறைவால் மீண்டும் மாணவர்கள் தேர்வு எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு இதுபோல ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், பழைய வினாத்தாளில் இடம்பெற்ற வினாக்களை அப்படியே திரும்பவும் கேட்டிருந்தார். இதனால், அவர் வினாத்தாள் தயாரிக்கும் குழுவிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது, மீண்டும் வினாத்தாள் சர்ச்சை எழுந்துள்ளதால் அதைத் தயாரித்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க அதிக வாய்ப்புள்ளது.




வினாத்தாளைத் தயாரிக்கும் குழுவில் உள்ள பேராசிரியர்கள் கடமைக்குப் பணியாற்றுவதே இதுபோன்ற செயல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்ட பிறகு, அதைச் சரிபார்க்க வேண்டியவர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கே பல பதவிகள் இருப்பதே இதுபோன்ற தவறுகள் நடக்க காரணமாக உள்ளது. எனவே, கூடுதல் பதவிகளை வகிப்பவர்களிடமிருந்து அந்தப் பதவிகளைப் பறித்து தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.