அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு வழக்கில் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா, உதவி பேராசிரியர்கள் அன்புச்செல்வன், மகேஷ்பாபு ஆகிய 3 பேரின் முன் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 3,02,000 ஆயிரம் மாணவர்களில் 90,000 பேர் மிக அதிக மதிப்பெண் பெற்றனர். அவர்களில் பலர் லஞ்சம் கொடுத்து மதிப்பெண் பெற்றதாகவும், இதற்காக 240 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகாரை அடுத்து, அப்போது தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா, மறு மதிப்பீடு நடைபெற்ற திண்டிவனம் பொறியியல் கல்லூரி முதல்வர் விஜயகுமார், உதவிப் பேராசிரியர் சிவகுமார் உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அவர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்படலாம் என்ற நிலையில், முன் ஜாமீன் கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா, பேராசிரியர்கள் அன்புச் செல்வன், மகேஷ்பாபு ஆகிய மூன்று பேரும் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை நடந்து வருவதால் மூன்று பேருக்கும் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதனையடுத்து, முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமா, பேராசிரியர்கள் அன்புச் செல்வன், மகேஷ்பாபு ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டது.