10,000 ரூபாய்க்கு 15 சதவிகிதம் அதிக மதிப்பெண்… கோடிகளைக் குவித்த பேராசிரியர்கள்!

10,000 ரூபாய்க்கு 15 சதவிகிதம் அதிக மதிப்பெண்… கோடிகளைக் குவித்த பேராசிரியர்கள்!

 

அண்ணா பல்கலைக்கழக முறைகேடுகள் பற்றி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு பகீர் கடிதம்


பதிவாளர் கணேசனை பதவியில் இருந்து நீக்க அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை; பல்கலைக்கழக முறைகேடுகள் அனைத்திற்கும் பதிவாளர் கணேசன்தான் காரணம் என குற்றச்சாட்டு #AnnaUniversity



தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்யும்போது 10,000 ரூபாய் பணம் கொடுத்த மாணவர்களுக்கு 15 சதவிகித அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் வழங்காத ஆசிரியர்கள்மீது நடவடிக்கை என்ற பெயரில் தேர்வுத்தாள் திருத்தும் பணியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளனர்.


படிப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை. 10,000 ரூபாய் இருந்தால் போதும், மறுமதிப்பீடு செய்து கூடுதல் மதிப்பெண் பெறலாம் என்ற நிலைக்கு மாற்றி கோடிக்கணக்கில் பணம் பார்த்திருக்கிறார்கள் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். லஞ்ச ஒழிப்புத் துறை 10 பேர் மீது நேற்று வழக்கு பதிவுசெய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளாக உள்ளன. இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பாடத்திட்டம் மற்றும் தேர்வு ஆகியவற்றை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திவருகிறது.




2017-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில் 3,02,380 பேர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில் 73,733 பேர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் 16,536 பேர் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, மறுமதிப்பீட்டில் ஈடுபட்ட உதவி பேராசிரியர்கள் 1,070 பேர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்குத் தடை விதிக்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு

நேற்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பதவிவகித்த பேராசிரியை உமா, பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இருவர் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரி பணியாளர்கள் என 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளது. கூடுதலாக மதிப்பெண் அளிக்க ஒவ்வொரு தேர்வுத்தாளுக்கும் 10,000 ரூபாய் வாங்கியதாகவும் போலியாக விடைத்தாள் தயார் செய்வதாகவும் இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.




பேராசிரியை உமா, அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக 2015-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பதவி வகித்துள்ளார். டாப் 10 வரிசையில் இடம்பிடிப்பதற்காகப் பல தனியார் கல்லூரிகள் இவரை அணுகியுள்ளன. கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்ததாகவும் மதிப்பெண்ணில் குளறுபடி செய்திருப்பதாகவும் தகவல்
வெளியானதால், 2018-ம் ஆண்டு இவரது பதவி பறிக்கப்பட்டது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பேராசிரியர் பணியில் இருக்கிறார். இவரை இடைநீக்கம் செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்வுகளில் அரியர் இருந்தால் உடனே மாணவர்கள் மறுமதிப்பீடு செய்யப்படுவது வழக்கம். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்று வந்தனர். இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் கூடுதல் வருமானம் கிடைத்தது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கூடுதல் வருமானம் வருவதற்காகவே தேர்ச்சி விகிதத்தைக் குறைத்து அதன் பிறகு மறுமதிப்பீடு மூலம் தேர்ச்சி பெறவைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது இருந்தது.
தற்போது, அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தவரே பணம் பெற்றிருக்கிறார் என்ற குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் அதிகம் வழங்கியதற்கான கோப்புகள், விடைத்தாள்கள் மற்றும் சொத்து விவரங்களும் கிடைத்துள்ளன.



தற்போது, தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பேராசிரியையாகப் பணியாற்றிவரும் உமா, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரியில் டீனாக பொறுப்பு வகிக்கும் உதவி பேராசிரியர் விஜயகுமார், இதே கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றும் சிவகுமார் ஆகியோர் மீது, `பதவியைப் பயன்படுத்தி மாணவர்களிடம் மதிப்பெண் உயர்த்தி வழங்க 10,000 ரூபாய் பெற்றனர்’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உமா கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்தபோது விஜயகுமாரும் சிவகுமாரும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக இருந்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை தனது முதல் தகவல் அறிக்கையில், `தேர்வுத்தாள் மறுமதிப்பீடு செய்யும்போது, 10,000 ரூபாய் பணம் கொடுத்த மாணவர்களுக்கு 15 சதவிகித அதிக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. அதிக மதிப்பெண் வழங்காத ஆசிரியர்கள்மீது நடவடிக்கை என்ற பெயரில் தேர்வுத்தாள் திருத்தும் பணியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேர்வுத்தாள் திருத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுத்தும் சாதித்துள்ளனர். 2017-ம் ஆண்டில் மறுமதிப்பீடு செய்யப்பட்டு அதிக மதிப்பெண் வழங்கிய தேர்வர்களின் விடைத்தாள்களும் அழிக்கப்பட்டிருக்கின்றன’ என்று பதிவுசெய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் பேசியபோது, “தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுத்தாளில் மதிப்பெண் அதிகம் பெற்றுத்தருவதற்கு என்று பல்கலைக்கழகத்துக்குள்ளும் வெளியேயும் இடைத்தரகர்கள் உள்ளனர். இந்த விவரம் 2017-ம் ஆண்டே அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகளுக்கும் உயர்கல்வித் துறையில் உள்ள அதிகாரிகளுக்கும் தெரிந்தாலும், எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். தற்போது புதிய துணைவேந்தராக சுரப்பா பதவி ஏற்ற பிறகே, குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இன்னொரு கொடுமையான விஷயம், பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்று பட்டமளிப்பு விழா வேறு நடந்துள்ளது” என்றனர் வருத்தத்துடன்.